Breaking News

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளரின் வாக்குறுதியை அடுத்து குடும்பஸ்தரின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!



பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளரின் வாக்குறுதியை அடுத்து குடும்பஸ்தரின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!






கிளிநொச்சி, பச்சிளைப்பள்ளி வண்ணங்கேணி பகுதியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து குடும்பஸ்தர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், பிரதேச செயலாளரின் சாதகமான வாக்குருதியை அடுத்து தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.




நேற்று முன்தினம் (ஜூன் 25) காலை 8 மணி அளவில் வண்ணங்கேணி பகுதியில் குறித்த குடும்பஸ்தர் சிறுதுளி நீரும் அருந்தாமல் இந்த அமைதி வழி கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.



 இப்போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதி பொது மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



போராட்டக்காரரின் 5 அம்ச கோரிக்கைகள்:

விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை முறைப்படி பிரிவு செய்து, எஞ்சிய பூமியைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் (சாணம் பாய்ச்சுதல்) செய்ய வழிவகுக்க வேண்டும்.



பின்தங்கிய சொத்தாகக் கருதப்படும் 500 ஏக்கர் காட்டில், 50 ஏக்கர் காணியை முதலீட்டுக்காக விடுவித்து, எமது கிராம மக்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.



கிராமத்தின் அபிவிருத்திக்குத் தடையாகவும், விவசாயத்தை வளர்க்க விடமாட்டோம் எனக் கூறியும் வரும் கிராம சேவையாளரை (GS) உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.



போதைப்பொருள் பாவனை இல்லாத ஒரு தூய்மையான அழகிய விவசாய கிராமத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.



அரச திட்டங்கள் மற்றும் சமூகப் பயன்பாடுகள் மக்களுக்குச் சரியாகச் சென்றடைய வேண்டும். அரசு ஊழியர்கள் சாதிவாதம், மொழிவாதம் மற்றும் இனவாதம் பார்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.



போராட்டம் நிறைவுற்ற விதம்:



நேற்று (ஜூன் 26) இரண்டாவது நாளாகவும் இப்போராட்டம் தொடர்ந்த நிலையில், மதியம் 2 மணி அளவில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்தனர்.




அங்கு போராட்டக் குழுவினருடன் கலந்துரையாடிய அதிகாரிகள், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாகப் பகிரங்கமாக வாக்குறுதி அளித்தனர். அதிகாரிகளின் இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.