Breaking News

நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்: பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!

 பூ)




நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்: பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!






இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டி, பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு எழுத்தாணை விண்ணப்ப வழக்குகளையும் வட மாகாண மேல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.




பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் ஒரு உறுப்பினருக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநரால் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த விசாரணையை இரத்துச் செய்யக் கோரி கடந்த 27.04.2026 அன்று மனுதாரர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்களின் ஆரம்பக்கட்ட சமர்ப்பணங்களை ஏற்ற நீதிமன்றம், அவ்விசாரணைக்கு இடைக்காலத் தடைக் கட்டளை விதித்திருந்தது.



:

இவ்வழக்கில் வடமாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி திரு. புவனேந்திரராஜா ஜனந்தன், கடந்த 11.05.2026 மற்றும் 13.05.2026 ஆகிய தினங்களில் நீதிமன்றில் வலுவான ஆட்சேபனைகளை முன்வைத்தார்.




இவ்வாறான எழுத்தாணை வழக்குகள் அனுமதிக்கப்பட்டால் அது அரச இயந்திரத்தின் செயற்பாட்டை முற்றாக முடக்கிவிடும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வர வேண்டுமே தவிர, விசாரணைக்கு முன்னரே அவை தடுக்கப்படக்கூடாது மற்றும் மனுதாரர்கள் நீதிமன்றத்தைத் தவறான தகவல்கள் மூலம் வழிநடத்தியுள்ளனர் மற்றும் எனவே, இந்த இடைக்காலத் தடையுத்தரவு நீக்கப்பட வேண்டும் என அவர் வாதிட்டார்.



மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன், இடைக்காலத் தடைக் கட்டளையை மேலும் நீடிக்குமாறு கோரி வாதங்களை முன்வைத்திருந்தார்.



நீதிமன்றத்தின் தீர்ப்பு:


இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த கௌரவ நீதிபதி, இன்றைய தினம் தனது தீர்ப்பை வழங்கினார். மனுதாரர்கள் நீதிமன்றத்தை எவ்வாறு தவறாக வழிநடத்தினார்கள் என்பதை நீதிபதி தனது கட்டளையில் விரிவாகச் சுட்டிக்காட்டினார்.




"விசாரணை தொடர்பான வர்த்தமானி பிரசுரிக்கப்படுவதற்கு முன்பாகவே, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அது குறித்து அறிந்து கருத்து வெளியிட்டார்" என்ற மனுதாரர்களின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பத்தில் இடைக்காலத் தடை வழங்கப்பட்டது. ஆனால், குறித்த விசாரணை விபரம் அதற்கு முன்பே வர்த்தமானியில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மனுதாரர்கள் நீதிமன்றைப் பிழையாக வழிநடத்தியே இடைக்கால நிவாரணத்தைப் பெற்றுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது என நீதிபதி தெரிவித்தார்.




மேலும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

போதிய கால அவகாசம்: விசாரணை அதிகாரி ஏற்கனவே மனுதாரருக்குக் கடிதம் அனுப்பி, சமூகமளிக்குமாறு கோரியதன் மூலம் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.




ஆளுநரின் அதிகாரம்: சட்ட ஏற்பாடுகளின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நீதிமன்றம் தன்பொறுப்பில் எடுத்து விசாரிக்க முடியாது. சட்டப்பூர்வ அதிகாரங்களைச் செயற்படுத்த அனுமதிக்க வேண்டும்.




பொறுப்புக்கூறல்: மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களும் சட்டத்திற்கும் மக்களுக்கும் உரிய பொறுப்புக்கூறலைக் கொண்டிருக்க வேண்டும். (எனினும், ஒருவருக்கு எதிரானவர்களின் கருத்துக்களை மட்டும் வைத்து விசாரணை ஆரம்பிக்கப்படுமாயின் அது ஆராயப்பட வேண்டிய விடயம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்).



நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியமை மற்றும் சட்ட ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, மனுதாரர்களால் பெறப்பட்ட இடைக்காலத் தடைக் கட்டளையை நீதிமன்றம் இரத்துச் செய்தது. அத்துடன், ஆளுநரின் விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கி, இரண்டு வழக்குகளையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.