பிள்ளைகளை நல்வழி நடக்கக்கோரும் பெற்றோர்கள் தாங்கள் அவ்வழியில் செல்ல வேண்டும் - பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!
பிள்ளைகளை நல்வழி நடக்கக்கோரும் பெற்றோர்கள் தாங்கள் அவ்வழியில் செல்ல வேண்டும் - பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!
பெற்றோர்களுக்குத் தற்போதைய சூழலில் பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக 'அதைச் செய்யாதே இதைச் செய்யாதே' என்று தினமும் அறிவுரைகளால் பிள்ளைகளை வழிநடத்த முயலுகிறார்கள். ஆனால், இன்றைய பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்லுவதையல்ல, செய்வதையே செய்கிறார்கள்.
பிள்ளைகளை நல்வழி நடக்கக்கோரும் பெற்றோர்கள் சொல்லால் அல்ல; செயலால் காட்டவேண்டும். முதலில் தாங்கள் அவ்வழியிற் சென்று காட்டவேண்டும். பெற்றோர்கள் எவ்வழியோ, பிள்ளைகளும் அவ்வழியிலேயே என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசுமை இயக்கத்தின் மாணவர்களை வலுவூட்டும் 'பசுமை அறிவொளி' நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (08.02.2026) நாவாந்துறை சென்.மேரிஸ் சனசமூக நிலைய முன்றிலில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களிடையே தவறான பழக்க வழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் கீழ்ப்படியாத போக்குத் தலைதூக்கியுள்ளது. வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள், போதைப் பொருள் பாவனைக்குக்கூட அடிமையாகி வருகிறார்கள். இந்த இளம் தலைமுறையை இவ்வாறு செல்ல அனுமதிக்க முடியாது. இது சம்பந்தப்பட்ட அந்த ஒரு மாணவரை மட்டுமல்ல; அவரது குடும்பத்தை மட்டுமல்ல; எமது ஒட்டுமொத்தச் சமூகத்தின் எதிர்காலத்தையுமே படுகுழிக்குள் தள்ளிவிடும். எனவே, எம் மாணவர்களை நல்வழியில் நடைபோட வைக்க சகல தரப்பினரும் முனைய வேண்டும். இதில் பாடசாலைகளைவிடப் பெற்றோருக்கே பெரும் பங்கு உள்ளது.
எந்தவொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளைக் குறை சொல்வதற்கு மனம் ஒப்பாது. தங்கள் பிள்ளைகளின் தவறான பழக்கங்களுக்கு அவர்களின் நண்பர்களையே குற்றம் சாட்டுவார்கள். தவறானவர்களின் சேர்கையினாலேயே தம்முடைய பிள்ளைகளும் பழுதானதாகச் சொல்லுவார்கள். மாணவர்கள் பாடசாலைகளில் செலவிடும் நேரத்தைவிட, நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைவிட, பெற்றோர்களுடன் செலவிடும் நேரமே அதிகம். பிள்ளைகளின் நடத்தைகளில் தங்களுக்கே பெரும் பங்கு
என்பதை மறந்துவிட்டு, மற்றவர்களால்தான் தங்கள் பிள்ளைகள் கெட்டது என்று சொல்லுவது தங்களைப் பொறுப்புக்கூற விரும்பாத ஒருவகை உளவியல் தப்பிதம்.
வீடுதான் பிள்ளைகளின் முதற் பாடசாலை. பெற்றோர்தான் பிள்ளைகளின் முதல் ஆசிரியர். பெற்றோர்தான் பிள்ளைகளின் முன்னுதாரணம். பெற்றோர் எதைச் செய்கிறார்களோ, பிள்ளைகளும் பிரதிசெய்யும் இயந்திரம் போல அதையே செய்வார்கள். பெற்றோர் புகைப்பிடித்தால், மது புகைப்பிடித்தால், மது அருந்தினால், பொய் பேசினால் இரவிரவாகத் தொலைக்காட்சிகளிலும் செல்லிடப்பேசிகளிலும் மூழ்கிக்கிடந்தால், தங்களுக்கு இடையில் வாக்குவாதங்களில் ஈடுபட்டால் பிள்ளைகளும் அவற்றையேதான் பிரதிபலிப்பார்கள். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, பிள்ளைகள் எவ்வாறு வளரவேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அவ்வாறு தாங்களே வாழ்ந்து வழிகாட்டவேண்டும் என்றும் தெரி
வித்துள்ளார்.
