இலங்கைக்கு அருகிலுள்ள ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
இலங்கைக்கு அருகிலுள்ள ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுக்க அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு அவ்வப்போது கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டு இருப்பதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் இன்னு அதிகாலை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தோப்பு வலசை கடற்கரை பகுதியில் மர்ம வாகனம் ஒன்றில் வந்த சிலர் பொட்டலங்களை இறக்கி வைத்து விட்டு சென்றிருப்பதாக தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக தோப்புலசை கடற்கரை பகுதியில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த பொட்டலங்களை சுங்கத்துறை துணை இயக்குனர் பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் அலுவலகத்திற்கு கொண்டு வந்து எடை போட்டு பரிசோதித்து பார்த்தபோது 116 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த கஞ்சாவை மர்ம வாகனத்தில் கொண்டு வந்து போட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தகடற்கரை பகுதிக்கு செல்லும் வழியில் சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின்அடிப்படையில் கடத்தல்பேர்வழிகளை கண்டறியும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்ட 116 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
