Breaking News

நிலாவெளி கடற்கரையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு; திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் ஆழ்ந்த அனுதாபம்!

 நிலாவெளி கடற்கரையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு;

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் ஆழ்ந்த அனுதாபம்!




நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) தனது ஆழ்ந்த அனுதாபங்களை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துள்ளது.


நிலாவெளி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே குறித்த சுற்றுலாப் பயணி கடலில் நீராடச் சென்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவம் குறித்து, திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமாரன் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 


மாவட்டத்தின் பிரதான பொருளாதாரத் தூணாக விளங்கும் சுற்றுலாத்துறையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பே முதன்மை முன்னுரிமையாக இருக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் திருகோணமலையின் முக்கிய சுற்றுலாக் கடற்கரைகளில் சர்வதேச தரத்திலான பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறோம். உயிர்காக்கும் (Lifeguard) சேவைகள், எச்சரிக்கைக் கொடிகள், பல்மொழி அறிவிப்புப் பலகைகள், அவசர மீட்பு உபகரணங்கள் மற்றும் அபாயப் பகுதிகளைக் குறித்தல் போன்ற பல்வேறு ஆலோசனைகளைத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளோம்.


திருகோணமலையை ‘கிழக்கின் முத்தாக’ உலக அரங்கில் நிலைநிறுத்துவதே எமது இலக்காகும். இத்துயரச் சம்பவம் கடற்கரைப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. 


இனிவரும் காலங்களில் இதுபோன்ற இழப்புகள் ஏற்படாதவாறு உடனடி நடவடிக்கைகளை அரசு மற்றும் பாதுகாப்புத் தரப்புகள் எடுக்கும் என நம்புகிறோம்.


 சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துப் பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற எமது சங்கம் எப்போதும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.