கொழும்பு சுதந்திர சதுக்க நடைபாதை சேதம் குறித்து ஹர்ஷவின் பதிவு..!
கொழும்பு சுதந்திர சதுக்க நடைபாதை சேதம் குறித்து ஹர்ஷவின் பதிவு..!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற நடைபாதை தற்போது சேதமடைந்துள்ளதாகவும், எவருக்கேனும் பாரதூரமான விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இது குறித்து ஆராயுமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது X தளப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இந்த நடைபாதையை, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தினசரி பயன்படுத்தி வருவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், தற்போதைய பராமரிப்புப் பணிகள் முடங்கியுள்ளதன் காரணமாக நடைபாதையின் மேற்பரப்பு கழன்று, கூர்மையான கற்கள் தரையிலிருந்து மேல்நோக்கி நீட்டிக்கொண்டிருப்பதாகவும், இதனால் முதியவர்கள் விழுந்து காயமடையும் பெரும் அபாயம் காணப்படுவதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நடைபாதையை புனரமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மண்ணும் பல மாதங்களாக எந்தவொரு பிரயோஜனமும் இன்றி கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவருக்கேனும் பாரதூரமான விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இது குறித்து ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது X பதிவின் ஊடாக கொழும்பு மாநகர முதல்வர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பால்தசார் (Vrai Cally Balthazaar) இந்த X பதிவிற்கு பதிலளித்துள்ளதோடு, இப்பிரச்சினையை நகர அபிவிருத்தி அதிகார சபையின் அமைச்சு மற்றும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்காக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிற்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
