Breaking News

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி; விசாரணை தீவிரம்!

 சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி; விசாரணை தீவிரம்!


====



சவுதி அரேபியாவின் அரசுக்கு சொந்தமான மாபெரும் எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவிற்கு (Saudi Aramco) சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) ராஸ் தானுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 14 சவுதி நாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஹார்முஸ் ஜலசந்திக்கு மேற்கே அமைந்துள்ள சவுதி அரேபியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை நிறுத்துவதற்கான இடைக்கால ஒப்பந்தத்திற்கு முன்னதாக, மத்திய கிழக்கு நாடுகள் தங்களின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை தீவிரப்படுத்தியுள்ளன. 


உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவும் இந்த ஏற்றுமதிப் போட்டியில் இணைந்துள்ள சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஸ் தானுரா முனையத்தின் மூலமான கச்சா எண்ணெய் விநியோக நடவடிக்கைகளை அராம்கோ நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தான் மீண்டும் தொடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.