தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள், அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.
தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள், அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி
சி.அ.யோதிலிங்கம்.
தமிழ் மக்கள் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான
சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இவ்வாரம் அவர் எழுதியுள்ள அரசியல் ஆய்வு காட்டுறையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு
தமிழ்ச் சமூகம் வரலாற்று ரீதியாக தொடர்ச்சியான ஏமாற்றங்கள் வந்த போதும் மீண்டும் மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தன்களை உருவாக்குவது உண்டு. அது தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைந்த அரசியலுக்குள் கொண்டு வருவதற்காக காலத்திற்கு காலம் பலதரப்புகள் முயற்சிகளைச் செய்து வந்தன. தற்போது தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை ஒரு பக்கத்திலும், வடக்கு, கிழக்கு ஆயர்கள் மன்றம் இன்னோர் பக்கத்திலும், முயற்சிகளைச் செய்து வருகின்றன.
தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அரசியல் தீர்வு தொடர்பாக ஒருங்கிணைந்த குரலை மேற்கொள்வதற்கு முயற்சிகளைச் செய்து அதில் சில வெற்றிகளையும் கண்டதாக அறிவித்துள்ளது.
அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்துடன் பேசும் போது கட்சி அடிப்படையிலும், தனித்தும் செயற்படுவதில்லை என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான அடுத்த சந்திப்பு இம்மாதம் இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆமோதித்து விரைவில் ஆவணத்தை தயாரிக்கப் போவதாகவும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தந்தை செல்வாவின் பிறந்த தின நிகழ்வில் கூறியிருக்கின்றார்.
தற்போது இதற்குப் புறம்பாக வடக்கு, கிழக்கு ஆயர்கள் மன்றம் கட்சிகளை ஒருங்கிணைந்த அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகளைச் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தலையொட்டி இந்த அறிவிப்பை ஆயர்கள் மன்றம் விடுத்திருக்கலாம். மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடாத்தப் போவதாக அரசாங்கம் கூறியுள்ளது. தேர்தல் நடக்குமோ இல்லையோ கட்சிகள் ஒருங்கிணைவது தமிழ் அரசியலுக்கு நல்ல விடயமே. ஆயர்கள் மன்றம் தனித்து இவ்விவகாரத்தை முன்னெடுக்காமல் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையுடன் இணைந்து முன்னெடுப்பது தமிழ் அரசியலைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விடயமாக இருக்கும். ஆயர்கள் மன்றத்தின் அறிவிப்பு வெளிவந்ததே தவிர இது தொடர்பான சந்திப்புகள் நடந்ததாகத் தெரியவில்லை. இந்த ஒருங்கிணைவு முயற்சியை ஒரு அரசியல் இயக்கமாக முன் கொண்டு செல்வது அதிக விளைபயன்;களைத் தரக்கூடியதாக இருக்கும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை பல காரணங்களுக்காக இந்த ஒருங்கிணைவு அரசியல் மிக அவசியமாக இருக்கின்றது. அதில் முதலாவது அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பதாகும்.
அரசியல் தீர்வு இல்லாமல் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது என்பது நாம் வரலாற்று ரீதியாக கண்ட உண்மையாகும்.
ஒருங்கிணைந்த குரல் இல்லாமல் அரசியல் தீர்விற்கான அழுத்தத்தை வலிமையாக்க முடியாது. அரசியல் தீர்வு தொடர்பாக பல்வேறு தயாரிப்புகளை செய்வது அவசியமாக உள்ளது. அரசியல் தீர்விற்க்கான கோட்பாட்டு வரைபை வரைதல், அரசியல் தீர்விற்கான உள்ளடக்க வரைபை வரைதல், தாயக, பிராந்திய, சர்வதேச மட்டத்தில் அரசியல் தீர்வு வரைபுகளை பேசு பொருளாக்கி உலகு தழுவிய வகையில் வலிமையான அழுத்தங்களை கொடுத்தல் என்பன இதில் முக்கியமானவையாக உள்ளன. இங்கு முக்கியம் அரசியல் தீர்விற்க்கான சூழலை கனிய வைப்பதே.
இரண்டாவது பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை மேம்படுத்துவதாகும். இது விடயத்தில் தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்து சர்வதேச விசாரணை வேண்டுமென்பதேயாகும். குற்றம் செய்தவனே நீதிபதியாக இருக்க முடியாது என்ற இயற்கை நீதிக் கோட்பாடு இக்கருத்துக்கு துணையாக உள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் கடந்த கால வரலாறுகளும் இக் கோரிக்கைகளுக்கு பக்கத்துணை புரிகின்றது. இந்த விவகாரத்திலும் பல பணிகள் காத்திருக்கின்றன சாட்சியங்களை தொகுத்தல் இதில் முக்கியமானது. கண்கண்ட சாட்சிகள் பலர் தற்போதும் வாழ்கின்றனர். அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் இதனைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏற்கனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆயிரக்கணக்கில் சாட்சியங்களை தொகுத்துள்ளது. அவை போதுமானவை எனக் கூற முடியாது.
இவை தவிர கட்டமைப்பு சார் இன அழிப்பு நடவடிக்கைகளை வலுவான ஆதாரங்களுடன் வரலாற்று ரீதியாக தொகுக்க வேண்டியிருக்கின்றது. இதனையும் தனியான அரசியல் இயக்கப் பிரிவாக முன்னெடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் இதற்கான வாய்ப்புகள் குறைவு. தவிர இந்த விவகாரத்தை அரசியல் தீர்வு செயற்பாடு போல சர்வதேச ரீதியாக பேசு பொருளாக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதற்கான சர்வதேச அரசியலில் சூழலை கனிய வைக்க வேண்டியுள்ளது.
மூன்றாவது ஆக்கிரமிப்புக்களை நிறுத்தச் செய்வதாகும். ஆயுதப் போர் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் ஆக்கிரமிப்புகள் தொடர் கதையாக உள்ளன. தமிழ்ப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. கிவுல் ஓயாத் திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் காணியில் சிங்களத் தரப்பின் உப்பளம் அமைக்கும் முயற்சிகள் என்பன இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆக்கிரமிப்புக்களில் பெரும்பாலானவை. முல்லைத்தீவு மாவட்டத்திலும் , வவுனியா வடக்கு பிரதேசத்திலும் இடம் பெறுவதைக் காணலாம். இந்தப் பகுதிகள் தாயகத் தொடர்ச்சியின் மையப் பகுதிகளாக உள்ளன. திருகோணமலை மாவட்டம் தாயகத் தொடர்ச்சியின் முதல் மையமாக இருந்தது. அங்கு ஆக்கிரமிப்புக்கள் முழுமை அடைந்ததைத் தொடர்ந்தே அடுத்த மையமான முல்லைத்தீவு மாவட்டத்திலும், வவுனியா வடக்குப் பிரதேசத்திலும் கவனம் செலுத்தப்படுகின்றது.
இனப் பிரச்சனை என்பது தேசிய இன அழிப்பாக இருப்பதால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஆக்கிரமிப்புகள் தொடரவே போகின்றன. இதனைப் பாதுகாப்பதற்கு சர்வதேச அரசியல் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்த வேண்டும். இந்த இரண்டு பணிகளையும் மேற்கொள்வதற்கு ஒருங்கிணைவு அரசியல் அவசியமாகின்றது. அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து நடாத்திய போராட்டங்கள் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளன. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம், அணையா விளக்குப் போராட்டம், கிவுல் ஓயாப் போராட்டம்; என்பவற்றை இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். தையிட்டி போராட்டமும் பலத்த கவனத்தை குவித்தது எனலாம் தமிழ் மக்களுடைய உலகளாவிய அரசியல் போராட்டம் தான் சிறீலங்கா அரசை அசைக்கப் பார்க்கும்.
நான்காவது நிலை மாறுகால நீதிப் பிரச்சனையான அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனவர்களது விவகாரம், இராணுவம் பறித்த காணிகளை மீட்டெடுத்தல் என்பவற்றிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஒருங்கிணைவு அரசியல் அவசியமாகும்.
பொதுவாக யுத்தம் முடிந்து சமாதானத்திற்கான முதல் பணி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகும். உலக நாடுகளில் இது இடம் பெற்றிருக்கின்றது. ஜே.வி.பி போராட்டக்காறர்கள் பலர் இதன் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ் இளைஞர்களைப் பொறுத்தவரை இது இடம் பெறவில்லை. 30 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களும் உள்ளனர். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அரசியல் இலக்கிற்காக ஆயுதம் தரித்தவர்கள் என்ற வகையில் அவர்கள் அரசியல் கைதிகளே! தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இவர்களை அரசியல் கைதிகள் என அடையாளமிடுவதற்கு தயாரில்லாத நிலையே காணப்படுகின்றது. நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என ஒரு தடவை கூறியிருக்கின்றார.;
அடுத்தது காணாமல் போனவர்கள் விவகாரம் இவர்களுக்கான நீதி விசாரணையை முறையான வகையில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளப் போவதில்லை. இழப்பீட்டையாவது அழுத்தம் கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இந்த விவகாரத்தை கையாளும் பொறுப்பை காணாமல் போனவர்களது உறவுகளிடம் கையளித்து விட்டு அரசியல் கட்சிகள் ஒதுங்கியிருக்க முடியாது. தாங்கள் பொறுப்பெடுக்க முன் வர வேண்டும்.
; இதே போல தான் இராணுவம் பறித்த காணிகளின் விவகாரமும் உள்ளது. தையிட்டி விகாரைப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றது. அதே வேளை இராணுவத்தினர் பறிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு தனியார் காணிகளில் மருத்துவமனை கட்டுவதாகவும் செய்திகள் வருகின்றன. பளை, ஊர்வணிகன்பற்று கிராமத்தில் இராணுவத்தினர் காணிகளை சுவீகரிக்க முயற்சிக்கின்றனர். இதையெல்லாம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது கூட வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாத காணிகள் ஏக்கர் கணக்கில் உள்ளன. அந்தக் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர.; யாழ்ப்பாணத்தில் நீர்ப்; பிரச்சினை உண்டு. இராணுவம் நல்ல நீருள்ள செம்மண்; பிரதேசத்தை பறித்து வைத்திருக்கின்றது.
ஐந்தாவது தேர்தலுக்கு முகம் கொடுத்தாலாகும். முன்னர் தமிழ்க்; கட்சிகளுக்கிடையில் தான் போட்டிகள் இருந்தன. தென்னிலங்கை முகவர் கட்சிகள் ஒரு சில ஆசனங்களை மட்டும் பெற்று வந்தன. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. தென்னிலங்கையின் இனவாதக் கட்சியும், இனப் பிரச்சனை என ஒன்று இல்லை என நிலவிரிப்புக்குள் உண்மைகளை மறைக்கும் கட்சியுமான தேசிய மக்கள் சக்தி கடும் போட்டியில் நிற்கின்றது. தமிழ்த்; தேசிய கட்சிகள் மீதான மக்களின் அதிர்ப்தியும், ஏற்கனவே செயற்பட்ட தென்னிலங்கை முகவர் கட்சிகளின்; வாக்குகளை ஒட்டுமொத்தமாக பெறுகின்ற நிலையும், அனுரகுமார திசாநாயக்க மீதான கவர்ச்சியும்; தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளை அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த உள்;ராட்சி சபைத் தேர்தலில் சற்றுச் சரிவு ஏற்பட்டாலும் இரண்டாவது நிலையில் அக்கட்சியே உள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடாவிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் நடைபெறும் என அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறு தேர்தல் நடைபெற்றால் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போட்டியிட வேண்டும். இல்லையேல் வடமாகண சபையினதும் கிழக்கு மாகாண சபையினதும் அதிகாரங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்வதற்கே வாய்ப்புக்கள் உருவாகும். தேசிய மக்கள் சக்தி தாம் இரு மாகாணங்களிலும் அதிகாரங்களை கைப்பற்றுவோம் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. அதற்கேற்ற வகையில் வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது “பிரஜாசக்தி” மூலம் அடித்தளகட்டமைப்புகளை உருவாக்கப் பார்க்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்;ராட்சி அமைப்புகளையும் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக அபிவிருத்தி வேலைகளைச் செய்கின்றது. வீதி விளக்குகளை அமைத்தல் உள்;ராட்சிச் சபைகளின் பணியாகும.; அதனையும் “பிரஜாசக்தி” அமைப்பினர் மேற்கொள்வதாக செய்திகள் வருகின்றன. இதற்கு புறம்பாக வடமாகாண சபையில் நிழல் அமைச்சரவையை தமது பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கி அதன் மூலமும் அபிவிருத்தி வேலைகளைச் செய்ய முயல்கின்றது.
ஆறாவது மக்களை தேசமாக திரட்டுவதாகும். ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் மக்களைத் தேசமாக திரட்ட முடியாது. புலம்பெயர் மக்கள் தாயக அடிப்படை சக்திகளில் முக்கிய பிரிவினர். தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் அவர்களையும் இலக்கை நோக்கி திரட்ட முடியாது. தமிழ் மக்கள் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனமாக இருப்பதால் தாயகத்திற்கு வெளியில் சேமிப்பு சக்திகளாக உள்ள உலகத் தமிழர்களையும், நட்பு சக்திகளாக உள்ள உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் அணி திரட்ட வேண்டிய தேவை உள்ளது. தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் இச்சக்திகளை ஒரு சிறிது கூட திரட்ட முடியாது.
எல்லாவற்றிக்கும் முக்கிய நிபந்தனை ஒருங்கிணைந்த அரசியல் தான். கட்சிகள் மட்டுமல்ல சிவில் அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சிகளை ஒருங்கிணைத்து விட்டால் சிவில் அமைப்புகளை ஒருங்கிணைப்பது கடினமாக இருக்கப் போவதில்லை.
ஒருங்கிணைவு அரசியலுக்கு கொள்கை உறுதிப்பாடு, சம அந்தஸ்து, அமைப்புப் பொறி முறை என்பன முக்கியம். கொள்கை உறுதிப்பாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. முயற்சி செய்தால் ஏனையவற்றிலும் வெற்றி கொள்ளலாம்.
ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையும் வடக்கு - கிழக்கு ஆயர்கள் மன்றமும் மேற்கூறிய விடயங்களில் கவனத்தை குவிப்பது தமிழ் அரசியலுக்கு ஆ
ரோக்கியமாக இருக்கும்
