மத்திய கிழக்கு போர் சூழல்: வீட்டிலிருந்தே பணியாற்றும்' (Work from Home) முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு
மத்திய கிழக்கு போர் சூழல்: வீட்டிலிருந்தே பணியாற்றும்' (Work from Home) முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உருவாகியுள்ள நிலைமையானது முன்கூட்டியே கணிக்க முடியாத ஒன்று என்பதால், நாடு என்ற ரீதியில் இந்த சவாலுக்கு அனைவரும் ஒன்றிணைந்து முகம் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் அத்தியாவசிய சேவைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து, அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
எரிபொருள் சிக்கனமும் வீட்டிலிருந்தே பணியும்:
எரிபொருள் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் அவசியமான சந்தர்ப்பங்களில் 'வீட்டிலிருந்தே பணியாற்றும்' (Work from Home) முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கல்வி மற்றும் சுகாதாரத்துறை:
போர்ச் சூழலால் கல்வித்துறை பாதிக்கப்படாமல் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், சுகாதார சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்காக, பிரதேச ரீதியாக அவசியமான எரிபொருள் கையிருப்புகளைப் பேணுவதற்கான வழிமுறைகளை கண்டறியுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
QR குறியீட்டு முறைமை மீள் அறிமுகம்:
விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான எரிபொருள் தேவைகளை எவ்வித தட்டுப்பாடுமின்றி பூர்த்தி செய்வதற்காக, டிஜிட்டல் QR குறியீட்டு முறையை (QR Code) விரைவாகவும் முறையாகவும் மீள நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
தொடர்ந்து மாறிவரும் உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, அதன் தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
