மண்டைதீவு மனித புதைகுழி விவகாரம் வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிசில் முறைப்பாடு
மண்டைதீவு மனித புதைகுழி விவகாரம் வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிசில் முறைப்பாடு..!
1990 ம் ஆண்டளவில் சிறீலங்கா ராணுவத்தினர் மற்றும் ஈபிடிபி துணை ராணுவ குழுவினரால் தீவுப் பகுதி வாழ் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல், ஆட்கடத்தல்களில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களின் சடலங்கள் புதைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற மண்டைதீவு பாடசாலை கிணறு மற்றும் மண்டைதீவு செம்பாட்டு தோட்டக்கிணறு போன்றவற்றை மீளவும் தோண்டியெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து அண்மையில் வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அவர்களை வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான திரு . சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் திரு . கருணாகரன் நாவலன் ஆகியோர் சந்தித்து முறைப்பாட்டினை வழங்கியதோடு வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய இன்றைய தினம் குறித்த பிரதேச சபை உறுப்பினர்களும் , பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர் . அத்துடன் சக வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான செ.திருக்கேதீஸ்வரன் , ம.கார்த்தீபன் ,சிவகுமார் மற்றும் ஜெ.அனுசியா ஆகியோரும் அங்கு வருகை தந்திருந்தனர்.
மண்டைதீவு செம்பாட்டு தோட்டக்கிணறு மனித புதைகுழியை தோண்ட வேண்டுமென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினை சேர்ந்த திருமதி .ஸ்ரிபன் மற்றில்டா என்பவரும் , மண்டைதீவு பாடசாலை கிணற்றிலுள்ள மனித புதைகுழியை தோண்டுமாறு கோரி வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் அவர்களும் தனித்தனியே பொலிஸ் முறைப்பாடு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.