Breaking News

உலகத்திற்கு தலைமைதாங்கும் வலுவை மேற்குலகம் இழந்துவிட்டதா? அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்

 உலகத்திற்கு தலைமைதாங்கும் வலுவை மேற்குலகம் இழந்துவிட்டதா? அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்




உலகத்திற்கு தலைமைதாங்கும் வலுவை மேற்குலகம் இழந்துவிட்டதா? என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் எழுதிய சர்வதேச அரசியல் கட்டுரையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.அதன் முழு விபரமும் வருமறு

 

ஈரான் -இஸ்ரேல் போர் எத்தகைய ஒப்பந்தமும் இன்றி போர் நிறுத்தத்திற்குள் பயணிக்கிறது. அதன் செய்தி போர் எந்த சந்தர்ப்பத்திலும் தொடங்கலாம் என்பதேயாகும். அது மட்டுமின்றி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவில் சர்வதேச வல்லரசு என்ற மகுடம் தகர்ந்து போகிறதென்பதை காட்டுவதாக ஈரான் இஸ்ரேலியப் போர் அமைந்திருக்கின்றது. போரை வழிநடத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்க்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை பாகிஸ்தான் அறிவித்துள்ளமையே உலக அதிசயமாக மாறியுள்ளது. இன்றைய இந்த உலக ஒழுங்கு அதன் வடிவங்களும் வெளிப்பாடுகளும் குழப்பத்துக்கு உட்பட்டு இருக்கிறது என்பதை இவை அனைத்தும் காட்டுகிறது.


நாடுகளுக்கு இடையே எந்தவிதமான ஒழுங்கற்ற ஒர் உலக ஒழுங்கை கண்டுகொள்ள முடிகிறது. அணுவாயுதத்தை அழிப்பதென்ற இலக்குடன் தொடக்கப்பட்ட இஸ்ரேலின் போர் இலக்கை அடைய முடியாத நிலையை ஏற்படுத்தியதுடன் அதிக இழப்பையும் தந்துள்ளது. அத்தகைய இழப்பானது வெறுமனையே அழிவுகள் மட்டுமல்ல உலகத்தின் தலைமைக்குரிய நாடான அமெரிக்காவை தள்ளாட வைத்துள்ளது. அமெரிக்காலவிடமிருந்து உலகத்தை பறித்தெடுப்பதென்பது கடினம் என்ற விவாதமும் அறிவின் கண்டுபிடிப்புகளும் வலுக்குன்றியுள்ளதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் இஸ்ரேல்- ஈரான் போர் உலக அரசியல் ஒழுங்கில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை தேடுவதாக உள்ளது.


முதலாவது போரை நிகழ்த்திய இஸ்ரேல்- ஈரான் பக்கம் ஏற்பட்டிருக்கும் பாரிய உள்கட்டமைப்பு சார்ந்த அழிவுகள் மிகப் பிரதான பார்வையாக தென்படுகிறது. ஆனால் அடிப்படையில் ஈரானின் வலு பிராந்தியத்தைக் கடந்து எழுச்சி பெற்றிருப்பதோடு இஸ்ரேலின் மேலாதிக்க போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. இதனால் இஸ்ரேலின் அரசியல்-இராணுவ பலம் ஏறக்குறைய ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றது என்றே தெரிகிறது. யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கும் நிலைக்குள் போர் ஏற்படுத்தியிருக்கிறது. காசாவின் மறு வடிவமாகவே டெல் அவிவ் காணப்படுகிறது. ஈரானியர்களும் பாரிய அழிவுகளை சந்தித்து இருந்தாலும் இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஒரு வலுவான சக்தியாக நிலை தம்மை நிறுத்தியுள்ளனர். இதனால் மேற்காசியாவில் உள்ள அனைத்து இராணுவ அரசியல் இலக்குகளும் ஈரானுடைய எல்லைக்குள் அல்லது அவதானிப்புக்குள் உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. இஸ்ரேலிய பிரதமர் நெதன்பயாகு தலைமையில் யூதர்கள் மீள முடியாத துயரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது உலக மேலாதிக்க உணர்வு பலவீனப்பட்டதோடு எந்த தரப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முடியும் என்பதை ஈரான் ஏற்படுத்தியிருக்கிறது.


இரண்டாவது இஸ்ரேல் ஈரான் போர் அமெரிக்காவை அதிகம் ஆபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது உலகத்தில் முதல் வல்லரசு என்ற பிம்பத்தை அமெரிக்கா இழந்துள்ளது. அமெரிக்காவால் முன்வைத்த போர் நிறுத்த உடன்படிக்கை உடனடியாகவே ஈரான் மீறியது அமெரிக்காவால் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ள முடியவில்லை என்பது அதன் அதிகாரத்தின் பலவீனத்தை காட்டுகிறது. மறுபக்கத்தில் பி2 குண்டுத் தாக்குதல் ஈரானின் மூன்று அணு உலைகள் மீது நிகழ்த்தி தோல்வி அடைந்துள்ளது. இது அமெரிக்கா தனது இராணுவ வலுவை இழந்திருக்கின்றது என்பதையே காட்டுகிறது. ஆமெரிக்காவின் அரசியல் வலுவும் இராணுவ வலுவும் ஒரே சந்தர்ப்பத்தில் ஈரான் இஸ்ரேல் போரில் அமெரிக்காவிடமிருந்து காணாமல் போய்விட்டது. அமெரிக்கா உலகத்துக்கு தலைமை தாங்குகின்ற திறனை இழந்திருப்பதாக மேற்குலக ஆய்வாளர்களே குறிப்பிடுகின்றனர். அதுமட்டுமன்றி இராணுவ நடவடிக்கைகளை அணு ஆயுதம் மீதான ஈரானை கட்டுப்படுத்துகின்ற தன்மைகளும் உலக அரசியலில் காணாமல் போய்யுள்ளது. அதற்கான வாய்களையும் தந்திரங்களையும் ஈரான் தனது நட்பு நாடுகளோடு இணைந்து வகுத்துள்ளது. வளைகுடாவில் உள்ள அல்லது மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ கடல்படை விமான தளங்கள் மீது ஈரானின் தாக்குதல் பாரிய நெருக்கடியை அமெரிக்க இராணுவ அரசியலில் ஏற்படுத்தி இருக்கின்றது. ட்ரம்ப் குறிப்பிடுவது போல் எத்தகைய சேதமும் இராணுவ தளங்களுக்கு விமானத்தலங்களுக்கோ ஏற்படவில்லை என்றாலும் ஈரானின் அரசியல் இராணுவ பலம் மேற்காசியாவில் வலுவடைந்து இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி விட்டது.


மூன்றாவது ஈரானிய இஸ்ரேலிய போர் ஐரோப்பாவை பாரிய அளவில் பாதித்துள்ளது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பன பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன் உலகத்துக்கு தலைமை தாங்கும் தராதரத்தையும் அவை இழந்துள்ளன. நேட்டோh நாடுகள் தமது தேசிய வருமானத்தில் 5சதவீதத்தை இராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்யும் நிலை ஏற்பட்டாலும் ஐரோப்பா ஏனைய கண்டங்கள் மீது மேற்கொண்ட அரசியல் இராணுவ பொருளாதார மேலாதிக்க நடவடிக்கைகள் பாதிப்பை அல்லது பலவீனத்தை அடைந்துள்ளது. ரஷ;சியா-உக்ரையின் போர் முதல் கட்டமான இழப்பை ஐரோப்பா கொடுத்தபோதும் ஐரோப்பா தன்னை தக்க வைத்துக் கொள்ள பல உத்திகளை கையாண்டது. ஆனால் ஈரான் இஸ்ரேலிய போரில் அயதுல்லா அலி காமினியின் (Ali Khamenei) நடவடிக்கை அத்தகைய பலத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. தாராண்மை கொள்கை ஜனநாயக சிந்தனை சுதந்திரம் சமத்துவம் போன்ற உரையாடல் உலகத்துக்கே அறிவுரை கூறும் வலுவை இழந்துவிட்டது. இதனால் ஐரோப்பா ஐ.நா சபை சர்வதேச சட்டம் பாதுகாப்பு கொள்கைகள் போன்ற அனைத்தையும் இஸ்ரேலின் அணுகுமுறையால் ஐரோப்பா இழந்துள்ளது உலகத்துக்கு அறிவுரை சொல்லும் தகமையை ஐரோப்பாவும் மேற்குலகமும் ஒட்டுமொத்தமாக இழந்திருக்கின்றன.


நான்காவது ஈரானின் அணுகுமுறை ஆசியா ஆபிரிக்க இலத்தீனமெரிக்க நாடுகளின் மக்களிடமும் அரசுகளிடம் அதன் ஆட்சியாளர்களிடம் அதிக தன்னம்பிக்கையும் வலுவையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் பொருளாதார இராணுவ தொழில்நுட்ப ரீதியில் வலுவான நிலையை நோக்கி தென் பூகோள நாடுகள் கட்டமைக்கும் ஒரு காலத்தை ஈரான் உருவாக்கியது. தந்திரங்களும் புலனாய்வுகளும் கொலைக் கலாச்சாரங்களும் அரங்கேற்றப்பட்ட மேற்கு மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருப்பு என்பது பலவீனமடைந்திருக்கிறது. அத்தகைய கொள்கைகளுக்கான உத்திகள் காணாமல் போய்விடவும் மீளவும் கீழத்தேசங்களை காவு கொள்ளும் அணுகுமுறைகள் முடிவுக்கு வருவதோடு உலக விதியை மீளமைக்க வேண்டிய தேவைபாட்டுக்குள் மேற்குலகம் தள்ளப்பட்டுள்ளது. அது மேற்குலகத்திடம் உள்ளதா அல்லது சீனா, ரஷ்சியாவிடமா என்ற கேள்வியை தந்துள்ளது. சீனா-ரஷ்சியக் கூட்டு வலுவான உலக ஒழுங்கை ஏற்படுத்த முடியும் என்பதை ரஷ்சிய ஜனாதிபதி புட்டின் அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கான அடித்தளத்தை ரஷ்சியா முன்வைத்தாலும் ஈரானே நிறைவேற்றியுள்ளது. மரபுசார் கலாசாரத்தையும் நாகரீகத்தையும் கொண்ட தேசம் ஈரான் என்ற வகையில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


எனவே முழு உலகத்தின் இருப்பில் ஈரான் இஸ்ரேல் போர் பாரிய குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. உலக ஒழுங்கு மீளமைக்கப்படுகின்ற நிலைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இராணுவ அரசியல் ஒழுங்கு புதிய வடிவத்தை நோக்கி நகர்கிறது. இதற்கான அடிப்படையை ஈரான் தொடக்கி வைத்துள்ளது. ரஷ்சியா முன்னோடியாக காணப்பட்டாலும் ரஷ்சியா ஒரு ஈரோசியன் நாடு அடிப்படையில் அதற்கு இருந்த முக்கியத்துவத்தை விட ஈரான் ஏற்படுத்தியிருக்கிற முக்கியத்துவம் தனித்துவமானது. அதனை நோக்கி அரசுகளும் அதிகாரங்களும் போர் முறைகளும் யுத்த தந்திரங்களும் மீள்ளமைக்கப்பட வேண்டிய நிலைக்கும் தலைமை தாங்குகின்ற நிலைக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


-பேராசிரியர் 

கே.ரீ.கணேசலிங்கம்-