Breaking News

யாழ். மாவட்ட செயலகத்தில் கிராம அலுவலர்களுக்கான தேர்தல் முன்னாயத்த செயலமர்வு!

 யாழ். மாவட்ட செயலகத்தில் கிராம அலுவலர்களுக்கான தேர்தல் முன்னாயத்த செயலமர்வு!



எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள  உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக இரண்டாம் கட்ட கிராம  அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (23.04.2025)  மு. ப 10.00 மணிக்கு  நடைபெற்றது. 

 

இதன் போது தலைமையுரையாற்றிய  தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராம அலுவலர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், எதிர்வரும்

மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத்  தேர்தலில் வாக்களிப்பு நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த பிரிவுக்குரிய கிராம அலுவலர்கள் வழங்கும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானதும் அத்தியாவசியமானதும் எனத் தெரிவித்துடன், இம்முறை வட்டாரத்திலேயே வாக்கெண்ணல் அமையவுள்ளதால் வாக்கெண்ணல் நிலையங்களையும் அமைக்கும் பொறுப்புக்கள் கிராம அலுவலர்களுக்கு உள்ளதால் பெளதீகச்சூழல் மற்றும் புறச்சூழலை போன்றவற்றை கருத்தில் எடுத்து வினைத்திறனான பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கடந்த இரண்டு தேர்தல்கள் கடமைகளில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் எதிர்நோக்கிய   இடர்பாடுகள் மற்றும் கருத்துக்களையும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டதுடன் அதற்குரிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.


மேலும் பொதுமக்களுக்கான கிராம அலுவலர்களின் சேவையானது மிக முக்கியமானது எனவும், நேர முகாமைத்துவம் பேணுவது அவசியமானது எனக் குறிப்பிட்டதுடன் ஒரு சில கிராம அலுவலர்களின்  அசமந்த செயற்பாட்டால் அது ஒட்டுமொத்த கிராம அலுவலர்களின் சேவையினையும் பாதிப்பதாக அமைவதாகவும் குறிப்பிட்டு, கிராம அலுவலர்கள் பொது மக்களுக்கான அர்பணிப்பான சேவையினை வினைத்திறனாக வழங்க  வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். 


உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள்  தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில்  கிராம அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. 


இச் செயலமர்வில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.