Breaking News

வட மாகாண மாணவர்களின் புத்தாக்கங்களை வெளிக்கொணரும் ‘NU InnoVista 2026’ தொழில்நுட்ப விழா

 பூ.லின்ரன்


(வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்)





வட மாகாண மாணவர்களின் புத்தாக்கங்களை வெளிக்கொணரும் ‘NU InnoVista 2026’ தொழில்நுட்ப விழா




வட மாகாண பாடசாலை மாணவர்களின் புதுமைக் கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ‘NU InnoVista 2026’ எனும் மாபெரும் கல்வி மற்றும் அறிவியல் கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.




“இன்றைய சிந்தனை எதிர்கால கண்டுபிடிப்புக்கான அடித்தளம்!” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வை SLIIT Northern Uni ஏற்பாடு செய்துள்ளது. காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வு, வட மாகாண மாணவர்களின் புதுமையான சிந்தனைகளையும் தொழில்நுட்பத் திறமைகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்தும் முக்கிய தளமாக அமையவுள்ளது.



இப்புத்தாக்கத் திருவிழா Discovery Lab, Vision Lens மற்றும் CodePark என மூன்று பிரதான பிரிவுகளின் கீழ் இடம்பெறவுள்ளது.



Discovery Lab பிரிவில் நிலையான மற்றும் பசுமைக் கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மற்றும் புத்தாக்க வணிக எண்ணங்கள் ஆகிய மூன்று பிரிவுகளில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.



Vision Lens பிரிவில் “புதிய சிந்தனைகளால் வட மாகாணத்தின் எதிர்காலத்தை வடிவமைப்போம்” என்ற கருப்பொருளில், கையால் வரைதல், நிழற்படம் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் படைப்பாக்கம் ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.



அதேவேளை, CodePark பிரிவில் பாடசாலை சார்ந்த பிரச்சினைகளுக்கான இலத்திரனியல் தீர்வுகளை உருவாக்கும் No-Code செயலி உருவாக்கம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் Low-Code செயலி உருவாக்கம் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன.



மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதுடன், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான சிறந்த களமாகவும் இந்நிகழ்வு அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், நாளைய உலகை வழிநடத்தக்கூடிய பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான உன்னத தளமாக ‘NU InnoVista 2026’ அமையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.