பருத்தித்துறையிலும் தியாகி திலீபனுக்கு நினைவேந்தல்
பருத்தித்துறையிலும் தியாகி திலீபனுக்கு நினைவேந்தல்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாகி திலீபனின் 39ஆவது நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (26) பருத்தித்துறையில் இடம்பெற்றன.
பருத்தித்துறை முருகன் கோயிலடியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியில் காலை 8.00 மணி முதல் அடையாள உண்ணாவிரதமும் நினைவு அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வுக்கு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமை தாங்கினார்.
தியாகி திலீபன் உயிர்நீத்த நேரத்தில் அடையாள உண்ணாவிரதம் நிறைவு செய்யப்பட்டதுடன், ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. ஈகைச்சுடரை மாவீரரின் சகோதரர் சி. வேந்தன் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மலர் மாலைகள் அணிவிக்கும் நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட போராளி அன்புவின் துணைவியார் விஜயபாமா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி திருமதி கோதை ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலைகளை அணிவித்தனர்.
மலர் அஞ்சலியை தியாகி திலீபனின் சகோதரர் கதிர் ஆரம்பித்து வைத்ததுடன், தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அடையாள உண்ணாவிரதத்தை நிறைவு செய்யும் வகையில் குளிர்பானங்களை பருத்தித்துறை வர்த்தகர் சங்கத் தலைவர் இரா. மயூரன் வழங்கிவைத்தார். மேலும், தியாகி திலீபனின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சித் தலைவர் சி. வேந்தன், கட்சி முக்கியஸ்தர் கதிர், பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல், உப தவிசாளர் இந்திரன், நகரசபை உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
