Breaking News

இலங்கையில் இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்..!

 இலங்கையில் இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்..!



நாட்டின் பல இடங்களில் இன்றும் (26.09.2026) பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். 


ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 


இதேவேளை சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணிக்கு 30-40 கி.மீ. வரை காணப்படும். 


காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். 


காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 


புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் அக் கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.