சட்டவிரோத கட்டடங்களை ஊக்குவிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!
சட்டவிரோத கட்டடங்களை ஊக்குவிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!
சட்டவிரோத கட்டடங்களை ஊக்குவிக்கும் சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் எச்சரித்துள்ளார்.
24/09 வியாழக்கிழமை சாவகச்சேரிப் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
சாவகச்சேரிப் பிரதேசசபையின் உறுப்பினர்கள் சிலர் சபை எல்லைக்குள் இடம்பெறுகின்ற சட்டவிரோத கட்டட வேலைகளுக்கு ஒத்துப்போவதாகவும்-இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இவ்வாறான உறுப்பினர்கள் சனி,ஞாயிறு தினங்களில் சட்டவிரோத கட்டிட வேலைகளைச் செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
சட்டவிரோத செயற்பாடுகளை தட்டிக்கேட்க வேண்டிய,கண்காணிக்க வேண்டிய பிரதேசசபை உறுப்பினர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வட்டாரங்களில் புதிதாக கட்டடம் அமைக்கும் குடியிருப்பாளர்களை கட்டிட அனுமதியைப் பெற ஊக்குவியுங்கள்.
தற்போது கட்டிட அனுமதிக்காக விண்ணப்பிக்கும் போது இழுத்தடிப்புக்கள் இல்லை.21நாட்களுக்குள் அனுமதிகளை வழங்குகின்றோம்.
அத்துடன் இதுவரை பாவனையில் இருந்த பொதுக் கிணறுகளை சிலர் தமது எல்லைக்குள் உள்ளீர்த்து மூடி அடைப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பொதுக்கிணறுகளை மூடி அடைப்பது பாரதூரமான செயற்பாடு எனவும் மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
