கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்ட களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 31 பேருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சட்ட மாஅதிபர் தீர்மானித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்ட களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 31 பேருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சட்ட மாஅதிபர் தீர்மானித்துள்ளார்.
சட்டவிரோத கூட்டத்தில் உறுப்பினராக இருத்தல், கொலை முயற்சி மற்றும் பலத்த காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 327 கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்படவுள்ளது.
கடந்த 2022 மே 09 ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அலரிமாளிகைக்கு வருகை தந்த ஆதரவாளர்களுக்கும், காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்த வன்முறையைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களும் எரிக்கப்பட்டு பெரும் பதற்றம் நிலவியது.
இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் நேரில் கண்ட சாட்சிகள், சூழ்நிலைச் சான்றுகள் மற்றும் தாக்குதல் நடந்த இடத்தின் காணொளிகள் குறித்த நிபுணத்துவ பகுப்பாய்வுகள் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் 34 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அரசியல் செயல்பாட்டாளர் டேன் பிரியசாத் மற்றும் முன்னாள் தொழிற்சங்க தலைவி வசந்தா ஹந்தபாங்கொட ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக ஏனைய 31 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மொரட்டுவை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக ஆகியோர் குறிப்பிட்டத்தக்கவர்கள் ஆவர்.
அத்துடன், தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமல் புஷ்பகுமார டி சில்வா, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அஜந்த லியனகே, முன்னாள் மாநகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம மற்றும் 'அரபு வசந்தம்' என அறியப்படும் அஸங்க நாலக விஜேசிங்க ஆகியோரும் இந்தக் குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ள ஏனைய முக்கிய நபர்களாவர்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முறைப்படி தாக்கல் செய்யப்படவுள்ளன.
அதேவேளை, இந்தச்சம்பவம் இடம்பெற்ற போது பிரதமராகப் பணியாற்றிய மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டாம் எனச் சட்ட மாஅதிபர் தீர்மானித்துள்ளார்.
விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் அவருக்கு எதிராகக் குற்றம் சுமத்துவதற்குப் போதுமானதாக இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தையும் தீவிரத் தன்மையையும் கருத்திற் கொண்டு, இதனை விசாரிக்க மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை (Trial-at-Bar) நியமிக்குமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவிடம் சட்ட மாஅதிபர் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
#Sooriyannews #srilanka #TruthAtAllCosts #Arangala #MahindaRajapaksha #UpdateNews
