இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே? ஓஎம்பி யாரை திருப்திப்படுத்த யாழில் நிகழ்வு.. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் கேள்வி.
இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே? ஓஎம்பி யாரை திருப்திப்படுத்த யாழில் நிகழ்வு.. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் கேள்வி.
இறுதி யுத்தத்தில் பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிரிடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை கூற முடியாத காணாமல் போனோர் அலுவலகம் (OMP) யாழில் காணாமல் போனோர் சர்வதேச தினத்தை கொண்டாடுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பினர்.
நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் அலுவலகத்தால் சர்வதேச மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்று 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் 29 சிறுவர்கள் உட்பட 100 பேர் வரை இலங்கை இராணுவத்திடம் அவர்களின் உறவினர்களால் உயிருடன் கையளிக்கப்பட்டனர்.
ஆனால் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தேடி கண்டுபிடிக்க முடியாத ஓ எம் பி சர்வதேச காணாமல் போனோர் தினத்தை யாழில் நடத்துவது இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களை மேலும் காயப்படுத்தும் ஒரு செயற்பாடாக பார்க்கிறோம்.
இலங்கையில் தமிழர்கள் காணாமலாக்கப்படுதல் என்பது மிகச் சாதாரண விடயமாக மாறிவிட்டது. வயது, பால் வேறுபாடின்றி காலத்துக்கு காலம் கடத்தப்பட்டிருக்கின்றனர். காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர்.
அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் அதிகளவான ஆண்களும், அதற்கு அடுத்த நிலையில் பெண்களும் இருக்கின்றனர். இதில் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படும் விவரமறியாத பிள்ளைகளும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
அதையும் தாண்டி குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையை தவிர உலகில் எங்குமே நடைபெற்றிருக்காத விடயம் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம் பெற்றிருக்கிறது.
இதுவரை பல குழந்தைகள் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும் இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நேரடி சாட்சி கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த வேளையில் அதிகளவான குழந்தைகள் தம் பெற்றாருடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே காணாமலாக்கப்பட் டுள்ளனர். அவர்தம் பெற்றாருடன் அழைத்துச் செல்லப்பட்ட சிறார்கள் மீளத் திரும்பவில்லை.
இந்த விடயம் காணாமல் போனோர் அலுவலகத்தின் விசாரணை அமர்வுகளில் ஆதாரத்துடன் முன்வைத்தும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இன்று வரை கூற முடியாத நிலையில் இந்த அலுவலகம் செயற்பட்டு கொண்டிருக்கிறது.
இலங்கையில் காலத்துக்கு காலம் மாறி வரும் அரசாங்கங்கள் இந்த விவகாரம் தொடர்பில் பேச மறுத்து வருகின்ற நிலையில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர் தொடர்பான விடயங்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஐநாவுக்கு பட்டியலிட்டு அனுப்பியது.
இவ்வாறான ஒரு நிலையில் காணாமல் போனோர் அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் போனோர் தினத்தை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த அலுவலம் உண்மையில் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அலுவலகம் அல்ல இது சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட அலுவலகம் என பாதிக்கப்பட்ட உறவுகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காணமல் போனோர் அலுவலகத்தில் இதுவரை 23 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் 9819 முறைப்பாடுகள் விசாரணை நிறைவுபெற்றதாக அலுவலகத்தின் தலைவர் யாழில் தெரிவித்திருந்தார்.
ஆனால் பல முறைப்பாடுகளில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்கள் தொடர்பில் அலுவலகத்திடம் எந்தப் பதிலும் இல்லை
இதுவரை முறைப்பாடு கிடைக்கப்பெற்றவர்களில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரிடம் இருந்து எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறும் நிலையில் 29 சிறுவர்களை இராணுவத்திடம் உயிருடன் கையளித்த நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பதில் இல்லை.
இவ்வாறான ஒரு நிலையில் இந்த மாநாட்டை தமிழர் பகுதிகளில் காணாமல் போனோர் அலுவலகம் நடத்துவது அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் ஒரு செயல்பாடாக பார்க்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்
