Breaking News

சத்திரசிகிச்சைக்கு உதவி கோரும் முன்னாள் போராளிகள்: "உதவடாவிட்டாலும் உபத்திரம் செய்யாதீர்கள்" - சிவாஜிலிங்கம் உருக்கமான வேண்டுகோள்!

 சத்திரசிகிச்சைக்கு உதவி கோரும் முன்னாள் போராளிகள்: "உதவடாவிட்டாலும் உபத்திரம் செய்யாதீர்கள்" - சிவாஜிலிங்கம் உருக்கமான வேண்டுகோள்!





"சத்திரசிகிச்சைக்காக உதவி கோரும் முன்னாள் போராளிகளுக்கு உங்களால் உதவ முடியாவிட்டாலும், தயவுசெய்து அவர்களைக் கொச்சைப்படுத்தி உபத்திரம் செய்யாதீர்கள்" என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய அரசியல்வாதியுமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.




முன்னாள் போராளி ஒருவர் தனது சத்திரசிகிச்சைக்காக ஊடகங்கள் வாயிலாகத் தமிழ் மக்களிடம் அண்மையில் நிதியுதவி கோரியிருந்தார். இதற்குப் பல தரப்பினரும் தாராளமாக உதவிக்கரம் நீட்டியிருந்த போதிலும், ஒரு சில நபர்கள் சமூக ஊடகங்கள் வழியாக அந்தப் போராளியைக் கொச்சைப்படுத்திப் பேசியதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.





இது குறித்து சிவாஜிலிங்கம் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"அன்பும் பாசமும் மிக்க தமிழ் மக்களே! எனக்கு நீங்கள் வாரி வழங்கிய உதவியைப் போல, தமது இளமைக் காலத்தைத் தமிழ்த்தேசியக் கொள்கைக்காக அர்ப்பணித்துப் போராடி, தற்போது வாழ்வாதாரத்தை நகர்த்த முடியாமல் தவிக்கும் ஏனைய போராளிகளுக்கும் உதவிக்கரம் நீட்டுங்கள்.




அதற்கு முதற்கட்டமாக, சத்திரசிகிச்சைக்காக உதவி கோரியிருந்த இருபாலையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு, எனது சிகிச்சைக்காகப் பொதுமக்களால் வழங்கப்பட்ட பணத்திலிருந்து இரண்டு இலட்சம் (2,00,000) ரூபாவினை நான் பகிர்ந்து வழங்கியுள்ளேன்."




முன்னாள் போராளிகள் தங்களின் மருத்துவ மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்காகப் போராடி வரும் நிலையில், அவர்களுக்குச் சமூக ரீதியான ஆதரவு தேவைப்படும் இவ்வேளையில், அவர்களைக் காயப்படுத்தும் செயல்களைத் தவிர்க்குமாறு தமிழ் நெஞ்சங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது