Breaking News

அனோஜனின் மரண தண்டனை உறுதி என குடும்பத்திடம் நேரடியாகத் தெரிவித்தார் – ராஜ்குமார் ராஜீவ்காந்த்

 அனோஜனின் மரண தண்டனை உறுதி என குடும்பத்திடம் நேரடியாகத் தெரிவித்தார் – ராஜ்குமார் ராஜீவ்காந்த்



“7ஆம் திகதி வரை தொடர்பு கொள்ள முடியும்; 


விடுதலைக்காக கடுமையாகப் போராட வேண்டிய நிலை” என தகவல்


எஸ் ஜே புஹாது 


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் குடும்பத்தை இன்று (20) காலை சந்தித்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த், அனோஜனுடன் சுமார் 10 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.


அனோஜனின் தம்பி ஹம்சிதனுக்கு சவூதியிலிருந்து அனோஜன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்த நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் தாமும் அனோஜனுடன் உரையாடியதாக ராஜ்குமார் ராஜீவ்காந்த் குறிப்பிட்டுள்ளார்.


அவர் வெளியிட்ட தகவலின்படி, அனோஜனின் வழக்கு ஆரம்பத்தில் சமூக வலைத்தளப் பதிவுடன் தொடர்புடைய வழக்காகக் கையாளப்பட்டு, ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.


பின்னர், தண்டனையை குறைப்பதற்கான முயற்சியாக இலங்கை தரப்பிலிருந்து மேன்முறையீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதேவேளை சவூதி அரசுத் தரப்பும் ஆரம்ப தண்டனை போதுமானதல்ல எனக் கூறி மேல்முறையீடு செய்ததாகவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


அதனைத் தொடர்ந்து, நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட மேலதிக விடயங்கள் வழக்கில் முன்வைக்கப்பட்டு, மேன்முறையீட்டு கட்டத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த தீர்ப்பு குறித்து அனோஜனுக்கு முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பதற்காக அவருக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டதாகவும் ராஜ்குமார் கூறியுள்ளார்.


இதேவேளை, அனோஜனின் தண்டனை மற்றும் வழக்கின் மேன்முறையீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக சில விடயங்கள் தவறான புரிதலுடன் கையாளப்பட்டுள்ளதாக அனோஜன் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


“அனோஜன் தனது தண்டனை குறித்து பல முறை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது அவருடைய விடுதலைக்காக நாம் கடுமையாகவும் ஒருங்கிணைந்தும் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என ராஜ்குமார் ராஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.


மேலும், செப்டம்பர் 7ஆம் திகதி வரை அவர் இருக்கும் சிறையிலிருந்து அனோஜனால் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது


இந்நிலையில், அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக குடும்பத்தினரும் அவரது சட்டத்தரணியும் தெரிவித்துள்ள போதிலும், சவூதி நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான அதிகாரப்பூர்வ தீர்ப்பு இன்னும் இலங்கைத் தரப்பிடம் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 


இந்த நிலையில், அனோஜனின் உயிரைக் காப்பதற்கான அடுத்தகட்ட சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.