Breaking News

மட்டக்களப்பு பசார் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.766000/- நிதி உதவி ..

 மட்டக்களப்பு பசார் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.766000/- நிதி உதவி ..



கடந்த ஜூலை மாதம் மட்டக்களப்பு பசார் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால், ‘ஐ போன் ரிப்பேரிங்’ என்ற ஸ்தாபனம் முற்றாக எரிந்து நாசமானது. இதனால் தொழில் இழந்த அக்கடையின் உரிமையாளர் சகோதரர் இர்ஷாத் அவர்களுக்கு, மட்டக்களப்பு சலாமா பவுண்டேஷன் மற்றும் மட்டக்களப்பு வர்த்தகர்களின் பெருமுயற்சியினால் திரட்டப்பட்ட நிதி உதவி இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட வர்த்தக ஸ்தாபனத்தினை மீளமைக்க மட்டக்களப்பு வர்த்தகர்களும், சலாமா பவுண்டேஷனின் நிர்வாகிகளும் இணைந்து நிதியுதவி திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 


இதன்படி, மொத்தம் 86 தனவந்தர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ. 7,66,000 (ஏழு லட்சத்து அறுபத்தாறாயிரம் ரூபாய்) நிதி திரட்டப்பட்டது.


சேகரிக்கப்பட்ட இந்த உதவித்தொகையை கையளிக்கும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை (31) அஸர் தொழுகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளரான இர்ஷாத் அவர்களிடம் இந்த உதவித்தொகை முறைப்படி கையளிக்கப்பட்டது.


சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தொழில் நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில், தாராள மனதோடு நிதியுதவி வழங்கிய அனைத்து தனவந்தர்களுக்கும் சலாமா பவுண்டேஷன் அமைப்பினர் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.