யாழ்ப்பாணத்தில் நீர் நெருக்கடியா? யார் சொன்னார்கள்? நல்லூரில் இளையோரின் உரையாடல் களம்
யாழ்ப்பாணத்தில் நீர் நெருக்கடியா? யார் சொன்னார்கள்? நல்லூரில் இளையோரின் உரையாடல் களம்
யாழ்ப்பாணம் - நல்லூர் நீர்வள கண்காட்சியில் "ஊருணி" எனப் பெயரிடப்பட்ட ஆற்றுகைக்களம் அதன் தொடக்க நாளான 16.08.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதன் அவர்கள் தலைமையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
முதல்நாளான நேற்று பாரம்பரிய கலை வடிவமான மம்பா பாடல் ஆற்றுகையை பாசையூரின் மூத்த அண்ணாவியார் கொலின்ஸ் மற்றும் அவரது அணியினரும் நிகழ்த்தியிருந்தனர்.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சமீபமாக அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் தொடரும் ஒன்பது நாள் கண்காட்சியின் போது ஊருணி களத்தில் தினமும் மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.
இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு "இயற்கையைப் பாடுவோம்" இசை நிகழ்ச்சியினை கேதீஸ்வரன், ஜஸ்ரின் குழுவினர் வழங்க இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து "யாழ்ப்பாணத்தில் நீர் நெருக்கடியா? யார் சொன்னார்கள்?" என்ற தலைப்பில் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் (Young Water Professionals) நிகழ்த்தும் உரையாடல் களம் இடம்பெறவுள்ளது.
இனிவரும் நாள்களுக்கான நிகழ்ச்சி விபரங்கள் தொடர்ச்சியாக பகிரப்படும் என்பதனை ஏற்பாட்டாளர்கள் அறியத் தந்துள்ளார்கள்.