. பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை..!
கிளி. பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை..!
கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை இன்று(20.11.2025) வியாழக்கிழமை நடைபெற்றது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பதிவாளர் பிரிவின் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களங்களால் வழங்கப்படும் சேவைகள், சமூக சேவைகள் திணைக்களங்களால் வழங்கப்படும் சேவைகள், மோட்டார் வாகன பதிவுமற்றும் அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், தென்னைப் பயிர்ச் செய்கை சபை, கமநல சேவைகள் திணைக்களம் தொடர்பான
சேவைகள், மின்சார சபை தொடர்பான சேவைகள், நீர் வழங்கல் அதிகார சபை தொடர்பான சேவைகள், திறன் அபிவிருத்திப் பிரிவு தொடர்பான சேவைகள்,வாகன வரி வருமான சேவைகள், மனித வள முகாமைத்துவப்பிரிவு தொடர்பான சேவைகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு தொடர்பான சேவைகள், கிராம அபிவிருத்தி பிரிவு தொடர்பான சேவைகள், கலாசாரப் பிரிவு தொடர்பான சேவைகள், கைத்தொழில் திணைக்களம் தொடர்பான சேவைகள், சமுர்த்தி திணைக்களம் முதலான திணைக்களங்களின் சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொண்டனர்.
மேலும், இதுவரை திருமணப் பதிவு செய்யாதிருந்த ஒரு தம்பதியினருக்கு திருமண பதிவும் செய்துவைக்கப்பட்டது.
இதனைவிட பிறப்புச் சான்றிதழ்கள், வியாபார நிறுவன பதிவுகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பொதுமக்களுக்கான வாழ்வாதார திட்டங்களும் வழங்கி வைக்கப் பட்டன. குறிப்பாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் "வலுவூட்டல்" திட்டத்தின் கீழ் 7.9 மில்லியன் ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் நீர் இறைக்கும் மின் மோட்டார்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக செவிப்புலனற்றவர்களுக்கான கருவி, சக்கரநாற்காலிகள், கட்டில், என்பனவும் தெங்கு அபிவிருத்தி சபை ஊடாக தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான புத்தகப்பைகளும், உறுமய திட்டத்தின் கீழ் காணி பத்திரங்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், நடமாடும் சேவையில் பங்குபற்றிய திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருகை தந்திருந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் நடமாடும் சேவையானது ஜனாதிபதி செயலகத்தின் நிதி அனுசரணையுடன்,
தொடர்ச்சியாக பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவருவதோடு மக்களுக்கு ஒரே இடத்தில் அவர்களது பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
